SLS தரச்சான்றிதழ் இன்றி டின் மீன் விற்பனை: ஐவருக்கு 110,000 ரூபாய் அபராதம்
கட்டாய SLS 591 தரச்சான்றிதழ் முத்திரை இன்றி டின் மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் உற்பத்தி செய்தமை தொடர்பில், பல்பொருள் அங்காடி உரிமையாளர் மற்றும் டின் மீன் உற்பத்தியாளர் உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மொத்தமாக 110,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
குறித்த பல்பொருள் அங்காடி மற்றும் அதன் இரண்டு அதிகாரிகளுக்கு மொத்தமாக 90,000 ரூபாய் அபராதமும், டின் மீன் உற்பத்தி நிறுவனம் மற்றும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருக்கு 20,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி, கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்தே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சோதனையின் போது, கட்டாய SLS 591 தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத, தலா 185 கிராம் எடையுடைய 87 டின் மீன்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட கையிருப்பில் சூரியகாந்தி எண்ணெய் அடங்கிய 64 டின் மீன்களும், ஒலிவ் எண்ணெய் அடங்கிய 23 டின் மீன்களும் அடங்கியிருந்தன. அவற்றில் 32 டின் மீன்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மிகுதி 55 டின் மீன்கள் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, உரிய தரச்சான்றிதழ் முத்திரையின்றி டின் மீன்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியமை, களஞ்சியப்படுத்தியமை, உற்பத்தி செய்தமை மற்றும் விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் குறித்த ஐவருக்கும் மொத்தமாக 110,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.