கொழும்பு மற்றும் புறநகர  வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு ரூ.3.2 பில்லியன் ஒதுக்கீடு - ஜனாதிபதி அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடிகாலமைப்பு முறைமைகளை மேம்படுத்தவும் கால்வாய்களைப் புனரமைக்கவும் 2027 வரவு - செலவுத் திட்டத்தில் 3.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார். 

கொழும்பு மற்றும் புறநகர  வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு ரூ.3.2 பில்லியன் ஒதுக்கீடு - ஜனாதிபதி அறிவிப்பு
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், நகர்ப்புற வடிகாலமைப்பு முறைமைகளை மேம்படுத்துவதற்கும் கால்வாய்களைப் புனரமைப்பதற்கும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் 3.2 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (12) வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, பிரதான கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாமையும், மழைநீரை வெளியேற்றுவதற்கு வடிகாலமைப்பு முறைமைகளில் போதிய கொள்ளளவு இல்லாமையுமே கொழும்பில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குப் பிரதான காரணங்கள் எனக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்கமைய, புனித செபஸ்தியார் கால்வாய் மற்றும் கிருலப்பனை கால்வாய் ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகளும், பிலியந்தலை மற்றும் கெஸ்பேவ பகுதிகளில் மழைநீர் வடிகாலமைப்பு முறைமைகளை மேம்படுத்தும் பணிகளும் 2027ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், பிலியந்தலை - கெஸ்பேவ மாற்றுப் பாதையோர மழைநீர் வடிகாலமைப்பும் இதன் கீழ் மேம்படுத்தப்படவுள்ளது.

மேலும், வத்தளை, களனி மற்றும் பியகம ஆகிய பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த 'முதுன் எல' திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதுடன், கொலன்னாவ மற்றும் ஒலியமுல்ல ஆகிய பகுதிகளில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் தொடர்ந்து செயற்படுத்தப்படும். பரந்த அளவிலான இந்த வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஹமில்டன் கால்வாயின் ஒரு பகுதியை அபிவிருத்தி செய்யும் பணிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு மேலதிகமாக நாட்டின் ஏனைய பல மாவட்டங்களுக்கும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படவுள்ளன. களுத்துறை மாவட்டத்தின் வாத்துவ மற்றும் மொல்லிகொட ஆகிய பகுதிகளிலுள்ள 'பிந்துனு எல' கால்வாய் கட்டமைப்பை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேபோன்று கம்பஹா, இரத்தினபுரி, திக்வெல்ல, பேருவளை மற்றும் ரத்கம ஆகிய பகுதிகளிலும் வடிகாலமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, மல்வத்து ஓயாவை அண்டி முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மன்னார் மாவட்டத்தின் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள முந்தெனி ஆறு திட்டத்துக்கான ஆரம்பகட்டப் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT