சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வேண்டாம்! அரசாங்கம் அவசர எச்சரிக்கை
வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக வழங்கப்படும் வாக்குறுதிகளை நம்பி, சுற்றுலா விசாவில் பயணிக்கும் இலங்கையர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.
குறிப்பாக மலேசியா, ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் மற்றும் ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் பலர் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடுபவர்கள் சட்டபூர்வமான நடைமுறைகளை மாத்திரமே பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்காக வழங்கப்படும் சுற்றுலா விசாவும், அங்கு சட்டபூர்வமாகத் தொழில் புரிவதற்கான வேலைவாய்ப்பு விசாவும் வெவ்வேறானவை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வெளிநாட்டுக்குச் சென்று, உரிய வேலை அனுமதியின்றித் தொழிலில் ஈடுபடுவது சம்பந்தப்பட்ட நாட்டின் குடிவரவு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறும் செயலாக அமையலாம்.
இதனால் சட்ட நடவடிக்கைகள், கைது மற்றும் நாடுகடத்தல் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் இலங்கையர்களைக் குறிவைத்து சிலர் தவறான வாக்குறுதிகளை வழங்குவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சுற்றுலா விசாவில் வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர் அதனை வேலைவாய்ப்பு விசாவாக மாற்றித் தருவதாகக் கூறும் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பிப் பயணிக்க வேண்டாம் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான வாக்குறுதிகளின் அடிப்படையில் பயணிக்கும் சிலர், எதிர்பார்த்த வேலைவாய்ப்பு கிடைக்காமல் பொருளாதார மற்றும் சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் நபர்கள் மோசடிகளுக்கும் மனிதக் கடத்தல் தொடர்பான குற்றச்செயல்களுக்கும் இலக்காகக்கூடும் என அமைச்சு எச்சரித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர் வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலை கிடைக்காமல் போகலாம்.
அத்துடன் சம்பளம் வழங்கப்படாமை, கடவுச்சீட்டை இழத்தல் மற்றும் சொந்த நாட்டிற்குத் திரும்புவதில் சிரமம் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடலாம். எனவே, வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறும் நபர்கள் அல்லது நிறுவனங்களின் சட்டபூர்வமான நிலையை முன்கூட்டியே உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பயணிக்கும் இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (Sri Lanka Bureau of Foreign Employment – SLBFE) உரிய முறையில் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட நாட்டில் தொழில் புரிவதற்குத் தேவையான சட்டபூர்வமான விசா மற்றும் அனுமதிகளைப் பெற்ற பின்னரே பயணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு ஒப்பந்தம், சம்பள விபரங்கள், தொழில் வழங்குநரின் தகவல்கள் மற்றும் பயண ஆவணங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே சரிபார்ப்பதும் முக்கியமாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகப் பணம் செலுத்துவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனம் SLBFE அனுமதி பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அத்துடன் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துமூல ஒப்பந்தம், சம்பளம், தங்குமிடம், தொழில் நிபந்தனைகள் மற்றும் விசா வகை ஆகியவற்றைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். சந்தேகத்திற்கிடமான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அல்லது அதிகளவான பணம் கோரும் நபர்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் தகவல் பெறுவது பாதுகாப்பானதாகும்.
மேலதிக விபரங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.slbfe.lk/ ஊடாக அறிந்துகொள்ளலாம்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.