கொழும்பில் வெள்ள நீர் வடிந்தோட தடையாகவுள்ள 60 இடங்கள் அடையாளம்: துப்புரவுப் பணிகள் தீவிரம்
கொழும்பு நகரின் 05 தேர்தல் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் சீராக வடிந்தோட தடையாகவுள்ள 60 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடுமையான மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நீரோட்டத்தைத் தடுக்கும் அடைப்புகளை அகற்றுவதற்கான கூட்டு விசேட நடவடிக்கை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 6ஆம் திகதி பெய்த கன மழை காரணமாக கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து நாரஹேன்பிட்ட, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கிருலப்பனை, தெமட்டகொட மற்றும் மத்திய கொழும்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வடிகான்கள் மற்றும் நீர்வழிகளில் தேங்கியுள்ள தடைகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முறையான பராமரிப்பற்ற வடிகால் அமைப்புகள், சட்டவிரோத நில நிரப்பல்கள், திட்டமிடப்படாத கட்டட நிர்மாணங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் குறைபாடு ஆகிய காரணிகளே அண்மைய வெள்ளப் பெருக்கத்தின் தீவிரத்தை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை இராணுவம், கொழும்பு மாநகர சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல முக்கிய அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த துப்புரவு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
எதிர்காலத்தில் கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்த அபாயத்தைக் குறைத்து, நீர்வடிகால் அமைப்பை மேம்படுத்துவதே இந்த கூட்டு நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.


எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

