இலங்கையில் பறக்கும் டாக்ஸி சேவையா? கொழும்பு துறைமுக நகரில் இன்று முதலாவது பரிசோதனை!
மின்சாரத்தில் இயங்கும், விமானி இல்லாத பயணிகள் ட்ரோன் சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான முதலாவது உத்தியோகபூர்வ பரிசோதனை, கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் இன்று புதன்கிழமை (11) காலை முன்னெடுக்கப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் இ-ஹேங் (EHang) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த நவீன பயணிகள் ட்ரோன்களை நாட்டில் அறிமுகப்படுத்துவது தொடர்பில், கடந்த ஓகஸ்ட் மாதம் குறித்த அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. ஓடுபாதை வசதிகள் ஏதுமின்றி செங்குத்தாக மேலெழுந்து தரையிறங்கக்கூடிய eVTOL தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன்களை, சுற்றுலாத்துறை, பயணிகள் போக்குவரத்து மற்றும் அவசரகால சேவைகளுக்காகப் பயன்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக, வணிக ரீதியான சேவைகளை உடனடியாக ஆரம்பிக்காமல், சுமார் 06 மாத காலத்துக்கு கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் விரிவான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பப் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென இரண்டு பயணிகள் பயணிக்கக்கூடிய வசதிகளைக் கொண்ட E216 ரக பயணிகள் ட்ரோன் ஒன்று அண்மையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
16 சுழலிகள், 12 மின்கலத் தொகுதிகள் மற்றும் மூன்று ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டுள்ள இந்த ட்ரோன், அதிநவீன கணினி முறைமையையும் உள்ளடக்கியுள்ளது. மத்திய கட்டுப்பாட்டு நிலையமொன்றிலிருந்து தொலைதூரக் கட்டுப்பாட்டு முறைமையின் ஊடாக இயக்கப்படக்கூடிய இந்த ட்ரோன் , ஏதேனும் விபத்து அல்லது தொடர்பாடல் தடங்கல்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தானியங்கி பாதுகாப்பு நெறிமுறைகளை முன்னெடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்தச் சேவையை நாட்டின் சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைத்து, சிகிரியா, பிதுரங்கல மற்றும் நாட்டின் தீவுப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகளை அழைத்துச் செல்வதன் ஊடாக புதிய சுற்றுலாச் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், இத்தகைய அதிநவீன திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை வான்படை மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரச நிறுவனங்களின் முறையான ஒருங்கிணைப்பும் அனுமதியும் அவசியமாகும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் ட்ரோன் போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.