மெகசின் சிறைச்சாலையில் ஷிராந்தி ராஜபக்ஷ விசேட பாதுகாப்பில் தடுத்து வைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக குறிப்பிட்டுள்ளது.
சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் அமைந்துள்ள அதி பாதுகாப்பான பகுதியில் அவர் தடுத்து வைக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசுக்குச் சொந்தமான வங்கியொன்றிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாய் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (08) உத்தரவிட்டது.
அதேவேளை, சந்தேகநபரான ஷிராந்தி ராஜபக்ஷவுக்குத் தேவையான வைத்தியப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவரை ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவருக்குரிய வைத்திய வசதிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
விளக்கமறியல் உத்தரவைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ நேற்றுப் பிற்பகல் சிறைச்சாலை பஸ்ஸில் பலத்த பாதுகாப்புடன் வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசத்தை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்த நீதிமன்றம், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.