எனக்கெதிராக எவ்வித மோசடி குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை: ரோஹித ராஜபக்ஷ தெரிவிப்பு
சுப்ரீம்சாட் (SupremeSAT) செயற்கைக்கோள் திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக இன்று (26) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியபோது, தமக்கெதிராக எவ்வித மோசடி குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு வளாகத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிலுவையிலுள்ள விசாரணைக் கோவையொன்றை நிறைவு செய்வதற்காகத் தகவல்களைத் திரட்டும் தமது கடமையையே புலனாய்வாளர்கள் முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தாம் தயாராக இருப்பதாகவும் ரோஹித ராஜபக்ஷ தெரிவித்தார்.
தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தீவிர அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் தமக்கில்லை எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது சகோதரர் நாமல் ராஜபக்ஷ குறித்து வினவியபோது, தாம் விரக்தியடைந்துள்ளதாகக் கூறப்படும் கருத்துக்களை நிராகரித்த ரோஹித ராஜபக்ஷ, இந்தச் சூழ்நிலையிலிருந்து தனது சகோதரர் மேலும் முதிர்ச்சியுடனும் பலத்துடனும் மீண்டு வருவார் என நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன், தனது சகோதரரின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பொதுமக்களுக்கு எதிர்பார்ப்புகள் உள்ளதா என்பதற்கு மக்களே பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு வாகனத் தொடரணிகளோ அல்லது ஆதரவாளர்களின் கூட்டமோ இன்றி மிக எளிமையாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்தமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், தாம் தனிப்பட்ட ரீதியில் ஒருபோதும் 'டிபென்டர்' (Defender) ரக வாகனத்தைப் பயன்படுத்தியதோ அல்லது சொந்தமாக வைத்திருந்ததோ இல்லை எனத் தெரிவித்தார்.
தனது தற்போதைய வழமையான வாழ்க்கை முறை மிகவும் சௌகரியமாகவும் சாதாரணமாகவும் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.