விவாகரத்து தீர்ப்புக்காக ரூ.65,000 இலஞ்சம்! காதி நீதிபதியும் மனைவியும் கைது!
விவாகரத்து வழக்கின் தீர்ப்பைத் தாமதமின்றி விரைவாக வழங்குவதற்காக 65,000 ரூபாய் இலஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில், கொழும்பு வடக்கு காதி நீதிமன்ற நீதிபதியும் அவரது மனைவியும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நீதிபதியின் மனைவி, அதே காதி நீதிமன்றத்தின் செயலாளராகவும் கடமையாற்றி வந்துள்ளதாக தெரியவருகின்றது.
விவாகரத்து வழக்கொன்றில் எவ்விதத் தாமதமுமின்றித் தீர்ப்பை வழங்குவதற்குப் பிரதிபலனாக, சந்தேகநபர்கள் இருவரும் குறித்த பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த இலஞ்சச் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட காதி நீதிபதியும் அவரது மனைவியும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (19) ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.