2027ஆம் ஆண்டுக்கான இலங்கை வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு: பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி உரை!
2027ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் இன்று (நவம்பர் 12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தவுள்ளார்.
இதற்காக நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்குக் கூடவுள்ளது. அதன்போது, 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதன்முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டது. தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (நவம்பர் 13) ஆரம்பமாகி, நவம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இதன்போது அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைக்கவுள்ளனர்.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 20ஆம் திகதி பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் எனப்படும் மூன்றாம் வாசிப்பு விவாதம் நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த விவாதம் டிசம்பர் 14ஆம் திகதி வரை மொத்தம் 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழுநிலை விவாதத்தின்போது அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கிடையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் மானியங்கள் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச நிதிச் செயலாற்றுகை அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் அரச வருமானம் 4,594.9 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. இது அரசாங்கத்தின் வருவாய் வசூலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அரசாங்கத்தின் வரவு செலவுக் கணக்கில் 441.4 பில்லியன் ரூபா பற்றாக்குறை பதிவாகியிருந்தது. ஆனால், 2026ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 22.3 பில்லியன் ரூபா வரவு செலவு மிகை பதிவாகியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடுகையில் அரச நிதி நிலுவையில் 463.7 பில்லியன் ரூபா முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 19 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வரி அல்லாத வருமானம் 30 சதவீதத்தால் உயர்ந்துள்ளதாக நிதிச் செயலாற்றுகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களின் பின்னணியில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் பொருளாதார முன்னுரிமைகள், அரச செலவினங்கள், வரி தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் இன்றைய வரவு செலவுத் திட்ட உரையில் விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, வாழ்க்கைச் செலவு, பொதுச் சேவைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்மொழிகிறது என்பதும் முக்கிய கவனத்தைப் பெறவுள்ளது. இன்றைய உரையுடன் ஆரம்பமாகும் நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட நடவடிக்கைகள், டிசம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்புடன் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளன.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.