முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை, எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசத்திற்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கிருலப்பனை பூர்வாராம வீதியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று புதன்கிழமை காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
‘சிரிலிய சவிய நிதியம்’ தொடர்பான கணக்கொன்றில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, அவரிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு மருத்துவ சிகிச்சைக்காக கடந்த செப்டெம்பர் 16 ஆம் திகதி அதிகாலை சிங்கப்பூர் சென்றிருந்த ஷிராந்தி ராஜபக்ஷ, கடந்த திங்கட்கிழமை இரவு நாடு திரும்பியிருந்தார். நாடு திரும்பிய அவருக்கு, எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக செப்டெம்பர் 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வௌிநாடு புறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ‘சிரிலிய சவிய’ அமைப்பின் நிதி நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில், ஷிராந்தி ராஜபக்ஷவின் சட்டத்தரணிகளினால் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை எதிர்பார்ப்பு பிணை மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.