புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு ஒரு வாரத்துக்குள் இலக்கத் தகடுகள்
புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள், பதிவு செய்யப்பட்ட ஒரு வார காலத்துக்குள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளைத் தயாரிக்கும் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இலக்கத் தகடுகளைக் காலதாமதமின்றி துரிதமாக விநியோகிக்கும் வகையில் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
அத்துடன், இவ்வருடத்தில் பதிவு செய்யப்படும் கார்கள், சொகுசு SUV ஜீப்கள் , ஓட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் முன் மற்றும் பின் பகுதிகளுக்குப் பச்சை நிற இலக்கத் தகடுகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வருமான வரி அனுமதிப்பத்திரங்களைச் சோதனையிடும்போது, பொலிஸார் மின்சார வாகனங்களை இலகுவாக அடையாளம் காண்பதற்கு இந்த மாற்றம் வழிவகுக்கும் என்று தெரிவித்த அவர், மின்சார வாகனங்களுக்கான பின்னணி நிறம் மாத்திரமே பச்சையாக மாற்றப்பட்டுள்ளதாகவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஏனைய குறியீடுகள் மற்றும் குறிப்புகள் வழமை போன்றே மாற்றமின்றி இருக்கும் என்றும் கூறினார்.
ஏனைய சாதாரண வாகனங்களைப் பொறுத்தவரையில், முன்பகுதிக்கு வெள்ளை நிறத் தகடும், பின்பகுதிக்கு மஞ்சள் நிறத் தகடும் தொடர்ந்து வழங்கப்படும் என்று சுட்டிக்காட்டிய அவர், 2024ஆம், 2025ஆம் மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள இலக்கத் தகடுகளை எதிர்வரும் 06 மாத காலத்துக்குள் முழுமையாக வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.