பெண்கள், குழந்தைகளின் தனிப்பட்ட படங்கள் இணையத்தில் விற்பனை - பெற்றோருக்கு அமைச்சின் அவசர எச்சரிக்கை
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்களைச் சமூக ஊடகக் குழுக்கள் மூலம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இணையவழி நெட்வொர்க் குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்கள் முழுவதும் விற்பனைக்கு வழங்கப்படுவதாகவும், அல்லது பயனர்களால் தேடப்படுவதாகவும் இயங்கி வரும் குழுக்கள் குறித்து அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அமைச்சால் திரட்டப்பட்ட தகவல்கள் மேலதிக விசாரணைக்காக, இலங்கை பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் (Sri Lanka Police Children and Women Bureau) மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (Computer Crime Investigation Division) ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்களை ஆரம்பத்தில் ஆய்வு செய்தபோது, கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நெருக்கமானவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்குவதற்காக போலி கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சிலர் தங்களது சொந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இணையத்தில் விநியோகிக்க முயற்சிக்கும் சம்பவங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும், இணையத்தில் அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பது குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தங்களது குடும்ப உறுப்பினர் யாராவது இவ்வாறான செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவோ அல்லது இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவோ யாரேனும் கருதினால், 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி எண்களைத் தொடர்புகொண்டு உடனடியாக உதவிகளைப் பெறலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பிரச்சினை குறித்து தங்களின் முழுமையான அவதானத்தைச் செலுத்தியுள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் இதன்மூலம் பாதிக்கப்படுவதைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு உறுதியளித்துள்ளது.