அதிக ஒலியுடன் ஒலிபெருக்கி பயன்படுத்தினால் சட்டம் பாயும் – பொலிஸார் எச்சரிக்கை!

பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்து, ஒலி காரணமாக இடையூறு ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டால், குறித்த ஒலி நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்துவார்கள்.

அதிக ஒலியுடன் ஒலிபெருக்கி பயன்படுத்தினால் சட்டம் பாயும் – பொலிஸார் எச்சரிக்கை!
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அயலவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் உள்ளிட்ட ஒலி உபகரணங்களை சட்டத்துக்கு உட்பட்டு பயன்படுத்துமாறு, இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதிக ஒலி காரணமாக கைக்குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்வதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உயர்நீதிமன்ற வழக்கு இலக்கம் 38/2005 இன் உத்தரவுக்கு அமைய, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலி உபகரணங்களை பயன்படுத்துவது தண்டனைச் சட்டக்கோவையின் 261ஆவது பிரிவின் கீழ் ‘பொதுத் தொல்லை’ எனக் கருதப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக, இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதில்லை.

எனினும், மத அல்லது விசேட நிகழ்வுகளின்போது சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு உரிய அனுமதி வழங்கப்படலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அனுமதி பெற்றிருந்தால் பயன்படுத்தக்கூடிய நேரங்கள்

பொலிஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான நேர வரையறைகள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளன:

திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை: இரவு 10.00 மணி வரை
வெள்ளி மற்றும் சனிக்கிழமை: அதிகாலை 1.00 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை: அதிகாலை 12.30 மணி வரை

எவ்வாறாயினும், இந்த நேர வரையறைகள் அனுமதிப்பத்திரம் பெற்ற அனைவருக்கும் தானாகக் கிடைக்கும் உரிமை அல்ல என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், ஒலி சம்பந்தப்பட்ட வளாகத்துக்குள் மட்டுப்படுத்தப்படும் வகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அயல் பகுதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்புவது அனுமதிக்கப்படாது.

அனுமதி வழங்கப்பட்ட நிகழ்வுகளில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்து, ஒலி காரணமாக இடையூறு ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டால், குறித்த ஒலி நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்துவார்கள்.

அந்த அறிவுறுத்தலை மீறி தொடர்ந்து அதிக ஒலியுடன் ஒலி உபகரணங்களை பயன்படுத்தினால், அவற்றை பொலிஸார் பொறுப்பேற்பது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, சட்டவிரோதமாக அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பப்படுவது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அல்லது 118, 119 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு, பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT