ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட ஒன்பது மாத கால சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பிலான வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யக் கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை மேல் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அந்தத் தீர்மானம் புதன்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் வாசித்து அறிவிக்கப்பட்டது.
குறித்த குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒன்பது மாத கால சாதாரண சிறைத் தண்டனையும் 1,500 ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
தற்போது மற்றுமொரு வழக்கிற்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளினால் புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விடயம் 2027 பெப்ரவரி 23 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் அவருடைய சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இதனையடுத்து, நீதவான் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் ஞானசார தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.