ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத் தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத் தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத் தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று திங்கட்கிழமை (05) உத்தரவிட்டுள்ளது.

கைது செய்வதற்கான திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளால் ஞானசார தேரர் இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்போது நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் மீதமுள்ள காலப்பகுதியை உடனடியாக அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு கட்டளையிட்டப்பட்டது.

நிலுவையில் இருந்த பிடியாணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த ஞானசார தேரரை, இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது இடம்பெற்ற நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே, அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதற்கமைய, நேற்று கொழும்பு மேலதிக நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் பிடியாணை தொடர்பான நகர்த்தல் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கு அமைவாகவே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதவானிடம் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றினால் அவருக்கு எதிராகப் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

இதன்போது ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, ஞானசார தேரர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த காரணத்தாலேயே ஆரண்ய சேனாசனத்துக்குச் சென்று தங்கியிருந்ததாகத் தெரிவித்தார். அத்துடன், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, ஞானசார தேரருக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அவர் விளக்கமறியலில் இருக்கும் காலத்தில் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் மன்றைக் கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் கருத்தில்கொண்ட மேலதிக நீதவான், ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். 

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்றில் நிலுவையிலுள்ள பிடியாணை தொடர்பில் அவரை இன்றைய தினம் அங்கு முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் பணித்தார். மேலும், கொழும்பு நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள பிடியாணை விவகாரம் தொடர்பில் புதன்கிழமை அவரை அந்நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT