மேல் மாடி, கீழ் மாடி வீடுகளுக்கு இருவேறு வரி கட்டுவதை தடுக்க ரூ.25,000 இலஞ்சம்: வருமான அதிகாரி அதிரடியாக கைது!
கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபையின் உப அலுவலகத்தில் பணிபுரியும் வருமான பரிசோதகர் ஒருவர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, 2018ஆம் ஆண்டு முதல் தான் வசித்து வரும் வீட்டின் மேல் மற்றும் கீழ் தளங்களுக்குத் தனித்தனியாக வரி செலுத்துமாறு, முறைப்பாட்டாளருக்குப் பிரதேச சபை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்காகக் கோரப்பட்ட ஆவணங்களை முறைப்பாட்டாளர் சமர்ப்பித்த போதிலும், வீட்டின் வரைபடம் மற்றும் மதிப்பீட்டில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி வருமான பரிசோதகர் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
இந்தச் சிக்கல்களைத் தீர்த்து, முறைப்பாட்டாளரின் பெயரிலேயே வரி செலுத்துவதற்கான வசதிகளைச் செய்து தருவதற்காக, அந்த அதிகாரி 25,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.
குறித்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட போதே, அங்கிருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (22) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.