பொருட்களை இறக்காமல் 25 மில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 25 வயது இளைஞன் கைது
நாட்டுக்குள் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 826 கோடி இலங்கை ரூபாய்) வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் 25 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக வங்கிகள் ஊடாக தபால் பரிமாற்றங்கள் (Telegraphic Transfers - TT) மூலம் முன்னெடுக்கப்பட்ட நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (FCID) மேற்கொண்ட விசாரணைகளின் ஒரு பகுதியாக, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பணப் பரிமாற்றங்கள், இலங்கையிலுள்ள 06 நிறுவனங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கொடுப்பனவுகள் என இவை காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்தப் பணப் பரிமாற்றங்களுடன் தொடர்புடைய பொருட்கள் எதுவும் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நிதிப் பரிமாற்றங்கள் அனைத்தும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.