"எயார்பஸ் மோசடி பிரித்தானியாவில் வெளிச்சத்திற்கு வந்தது: இதில் அரசியல் பழிவாங்கல் இல்லை" – அமைச்சர் விஜித ஹேரத் திட்டவட்டம்!
எயார்பஸ் (Airbus) விமானக் கொடுக்கல் வாங்கல் ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணைகளில் எவ்வித அரசியல் பழிவாங்கலும் இல்லை எனவும், நாட்டின் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்துடன், எயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இடம்பெற்ற பாரிய நிதி முறைகேடுகள் தொடர்பில் முதன்முதலில் பிரித்தானியாவின் விசாரணைகளிலேயே வெளிச்சத்திற்கு வந்தது என்றும் அவர் கூறினார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் மீதான சட்ட நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கல் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் முற்றாக நிராகரித்துள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், நீதிமன்றமே சாட்சிகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதேவேளை, “கடந்த நல்லாட்சி மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்திலேயே இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும், உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் மறைக்கப்பட்டிருந்தன. தற்போதைய அரசாங்கம் அந்த வழக்குகளை சட்டப்படி மீண்டும் ஆரம்பிக்க மட்டுமே வழிவகை செய்துள்ளது.
ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி, நாட்டிற்கு சொந்தமான பணத்தை மீட்க வேண்டும் என்பதே காலி முகத்திடல் போராட்டம் மற்றும் நாட்டின் இளம் தலைமுறையினரின் பிரதான கோரிக்கையாக இருந்தது” என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.