நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவா? அசையும், அசையா சொத்துகள் முடக்கப்படும்
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் தலைமறைவாக உள்ள அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் மறைந்து வாழும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உள்ளதாக இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.
1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 60ஆம் பிரிவின் கீழ், பிடியாணையை நடைமுறைப்படுத்த முடியாத வகையில் தலைமறைவாக இருக்கும் நபரொருவருக்கு எதிராக நீதிமன்றத்தால் எழுத்துமூல பிரகடனம் ஒன்றை வெளியிட முடியும். அதற்கமைய, குறித்த நபர் குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் முன்னிலையாவதற்கு குறைந்தது 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
அவ்வாறு நீதிமன்றத்தால் எழுத்துமூல பிரகடனம் வெளியிடப்பட்ட பின்னரும் குறித்த நபர் முன்னிலையாகத் தவறினால், குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 61ஆம் பிரிவின் பிரகாரம் அவருக்குச் சொந்தமான அசையும் அல்லது அசையா சொத்துகளை முடக்குவதற்கோ அல்லது பறிமுதல் செய்வதற்கோ உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்துக்கு முழுமையான அதிகாரம் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.