இலங்கை மற்றும் தாய்லாந்து இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விசேட பேச்சுவார்த்தை

தாய்லாந்து பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவ் மற்றும் இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் அலரி மாளிகையில் சந்தித்து இருதரப்பு வர்த்தகம், விசா விலக்கு ஒப்பந்தம் மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இலங்கை மற்றும் தாய்லாந்து இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விசேட பேச்சுவார்த்தை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் தாய்லாந்து பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவ் மற்றும் இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நவம்பர் 23 ஆம் திகதி இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும், இரு நாட்டு வர்த்தகர்களுக்கும் சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வது குறித்து இச்சந்திப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், சாதாரண கடவுச்சீட்டுக்களைக் கொண்ட இலங்கைப் பிரஜைகள் தாய்லாந்திற்குச் செல்லும்போது 30 நாட்களுக்கு விசா இன்றிப் பயணிப்பதற்கு அனுமதியளிக்கும் வகையில் 2026 நவம்பர் 22 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். மக்களுக்கிடையிலான தொடர்புகளை ஊக்குவிப்பதற்கும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இதுவொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சுற்றுலாத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்த பங்காண்மைகளை உருவாக்குதல் ஆகிய விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. மேலும், இந்து சமுத்திரத்தில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தையும், கடல்சார் மற்றும் துறைமுக மையமாக அதன் முக்கியத்துவத்தையும் அங்கீகரித்த இரு தரப்பினரும், கடல்சார் ஒத்துழைப்புத் தொடர்பில் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

விவசாயத் துறையில் குறிப்பாக உணவுப் பதப்படுத்தல், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் நிபுணத்துவப் பகிர்வு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 'எக்ஸ்போ ஸ்ரீலங்கா' கண்காட்சியில் பங்கேற்று, இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது அழைப்பு விடுத்தார்.

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி ஊடான பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர் ஒத்துழைப்பு ஆகியனவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்களாகும். அத்துடன், டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்குத் தாய்லாந்து அரசாங்கம் வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளுக்குப் பிரதமர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர் பைதூன் மஹபன்னபோர்ன், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட தாய்லாந்துத் தூதுக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT