போதைப்பொருள் கடத்தல் பணத்தில் வாங்கிய ரூ. 35 மில்லியன் பெறுமதியான சொகுசு ஜீப் பொலிஸாரால் முடக்கம்
போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான டொயோட்டா சொகுசு ஜீப் ரக வாகனத்தை 14 நாட்களுக்கு முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துகள் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத செயற்பாடுகள் ஊடாக சொத்துகளை ஈட்டியமை தொடர்பில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான வாகனமே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளை அடுத்தே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த டொயோட்டா வாகனம் போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் பெறப்பட்ட நிதியைக் கொண்டே வாங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய, செப்டம்பர் 16ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த முடக்க உத்தரவின் கீழ், அடுத்த 14 நாட்களுக்கு குறித்த வாகனத்தை விற்பனை செய்வதோ, வேறு தரப்பினருக்கு மாற்றுவதோ அல்லது வேறு எந்த வகையிலும் அப்புறப்படுத்துவதோ முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துகள் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.