பொருளாதார சீர்திருத்தங்களை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கை வருகை
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலவரங்கள் குறித்த முக்கியமான மதிப்பீட்டுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவினர் இன்று வியாழக்கிழமை நாட்டிற்கு வருகை தருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபஜோர்ஜியு தலைமையில் வருகை தரும் இக்குழுவினர் எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.
நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழான ஏழாவது மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான உறுப்புரை நான்கு (Article IV) கலந்தாய்வு ஆகியவற்றுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து அரசாங்க அதிகாரிகளுடன் இக்குழுவினர் விரிவாக ஆராயவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதுடன், பொருளாதார வளர்ச்சி, அரசாங்க நிதி நிலைமை, வருமானத் திரட்டல் மற்றும் வெளிநாட்டு கையிருப்பு உள்ளிட்ட முக்கிய பேரியல் பொருளாதார குறிகாட்டிகள் குறித்தும் இக்குழு மீளாய்வு செய்யவுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார செயற்பாடுகள், அரசாங்க வருமானம் மற்றும் வெளிநாட்டு கையிருப்பு ஆகியவற்றில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு பொருளாதார மீட்சியை நோக்கி இலங்கை நகர்ந்து வருகின்றது.
இருப்பினும், வெளிப்புற அதிர்ச்சிகளின் தாக்கம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களின் வேகத்தை தொடர்ச்சியாகத் தக்கவைத்துக்கொள்வது உள்ளிட்ட பல சவால்கள் இன்னமும் நிலவி வருகின்றன. இந்நிலையிலேயே நாட்டின் பொருளாதார கொள்கைகள், நிதி நிலைமைகள் மற்றும் நடுத்தர கால பொருளாதார நோக்கு ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் உறுப்புரை நான்கு கலந்தாய்வும் இதனுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் திகதி நிலவரப்படி, சர்வதேச நாணய நிதியத்தின் கீழ் இலங்கைக்கு சுமார் 1.76 பில்லியன் சிறப்பு வரைதல் உரிமை (SDR) நிதி அர்ப்பணிப்பு நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஜூன் 24 முதல் 30 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்திருந்த நாணய நிதிய அதிகாரிகள் பொருளாதார முன்னேற்றங்களை ஆய்வு செய்திருந்த நிலையில், தற்போதைய விஜயத்தின் முடிவுகள் மற்றும் மதிப்பீட்டு விபரங்களை எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.