பொருட்களை இறக்குமதி செய்வதாக 80 மில்லியன் டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய வர்த்தகர் கைது
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 2,300 கோடி ரூபாய் பெறுமதியான 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 34 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மருதானை பகுதியைச் சேர்ந்த குறித்த வர்த்தகரை, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மருதானையில் வைத்து கைது செய்துள்ளனர்.
2023ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தச் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கொடுப்பனவுகள் என்ற போர்வையில், தந்திப் பணப்பரிமாற்ற முறைமை (Telegraphic Transfer - T/T) ஊடாக சந்தேகநபர் இப்பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.