இந்தோ-பசிபிக் பாதுகாப்பு தலைமை அதிகாரிகளின் மாநாட்டில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு
கனடாவின் விக்டோரியா நகரில் நடைபெற்ற 28 ஆவது வருடாந்த இந்தோ-பசிபிக் பாதுகாப்பு தலைமை அதிகாரிகளின் (CHOD) மாநாட்டில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகொந்த இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார்.
கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 02 ஆம் திகதி வரை இந்த மாநாடு இடம்பெற்றது. இம்மாநாட்டில் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பலதரப்பு கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட பாதுகாப்புச் செயலாளர், பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் பாதுகாப்பு மாற்றங்கள், புதிய சவால்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய பங்காளர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்த இலங்கையின் நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் முன்வைத்தார்.
கனடாவின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜென்னி கரிக்னான் மற்றும் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பபரோ ஆகியோரால் இம்மாநாடு இணை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நடப்பாண்டு மாநாடானது "கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்: ஆற்றல்மிக்க இந்தோ-பசிபிக் நிலப்பரப்பில் உள்ள சவால்களைக் கையாளுதல்" எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது. மூன்று நாட்களாக நடைபெற்ற இம்மாநாட்டில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் இராணுவத் துறைத் தலைவர்கள் கலந்துகொண்டு, கூட்டுப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
அத்துடன், மாநாட்டின் பக்கவாட்டில் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த, பல நாடுகளின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டார். இச்சந்திப்புகளின்போது பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், இராணுவப் பயிற்சி, திறன் மேம்பாடு, கடல்சார் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ தயார்படுத்தல் மற்றும் தொழில்முறை இராணுவப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.