ஜப்பான், மத்திய கிழக்கில் சலுகைக் கட்டணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் அறிவிப்பு

ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சலுகைக் கட்டண அடிப்படையிலான புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் அறிவித்துள்ளது.

ஜப்பான், மத்திய கிழக்கில் சலுகைக் கட்டணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் தொழில் வாய்ப்புகளுக்கு மேலதிகமாக, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சலுகைக் கட்டண அடிப்படையிலான பல புதிய வேலைவாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

துபாயில் முன்னெடுக்கப்படும் விமான நிலைய நிர்மாணப் பணிகளுக்காக 2,000 வேலைவாய்ப்புகள் தற்போது நிலவுவதாகவும், அதிகபட்சமாக 150,000 ரூபா செலவில் விண்ணப்பதாரர்கள் துரிதமாக இந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்தின் தலைவர் ஆனந்த லால் ஹெட்டியாரச்சி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அத்துடன், மேலும் 800 மேற்பார்வையாளர் பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கான செலவு 180,000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்தக் கட்டணங்கள் அனைத்தும் உள்ளடங்கிய முழுமையான தொகை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் ஒன்றில் இலங்கைப் பட்டதாரிகள் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாகப் பணியமர்த்தப்படவுள்ளனர். இதற்கான முழுச் செலவுகளையும் குறித்த நிறுவனமே ஏற்றுக்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜப்பானில் உள்ள மூன்று முன்னணி நிறுவனங்களுடன் தமது முகவரகம் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்த தலைவர், ஜப்பானிய நிர்மாண நிறுவனமொன்றுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், சப்புகஸ்கந்தையில் முன்னோடித் திட்டமாக 23 மாணவர்கள் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார். குறித்த நிறுவனமே தொழினுட்பப் பயிற்சிகள் மற்றும் ஜப்பானிய மொழிப் பயிற்சிகளுக்கான நிதியை வழங்குவதோடு, எதிர்காலத்தில் இந்த வேலைவாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

அத்துடன், ஜப்பானிய மெட்டா டெக்னோ நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் அடிப்படை ஜப்பானிய மொழித் தேர்ச்சியுடைய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பப் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மற்றொரு ஜப்பானிய நிறுவனம் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தவர்களுக்காக கனரக வாகன சாரதிகள் பிரிவில் 1,000 வேலைவாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஜப்பானிய மொழித் தேர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், தேவையான தகைமைகளைப் பெறுவதற்கு முகவரகம் உதவி வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்வேலைவாய்ப்புகள் தொடர்பான முழுமையான தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் முகநூல் பக்கத்தினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT