பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி! இலங்கையின் மனிதாபிமான உதவித் திட்டம்
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரிடர்களைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக இலங்கை அரசு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கவுள்ளது.
நேபாளத்தில் நேர்ந்துள்ள இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகளுக்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்த 1 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குமாறு அவர் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களின் சார்பாகவும், அரசாங்கத்தின் சார்பாகவும், குறிப்பாக தங்களது உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு இலங்கை ஜனாதிபதி தனது அனுதாபங்களைப் பகிர்ந்துள்ளார்.
இலங்கை மற்றும் நேபாளத்துக்கு இடையே உள்ள நீண்டகால நட்புறவை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதே, இந்த நிதியுதவியின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷிசிர் கானலுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது நேபாளத்துக்கு இலங்கையின் இரங்கலையும், ஆதரவையும், ஒற்றுமையையும் அவர் தெரிவித்தார்.
நேபாளத்தின் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு மேலும் பங்களிக்கக்கூடிய பிற வழிகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும், இதற்காக நேபாள அரசுடன் இலங்கை தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்கும் என்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.