மீலாதுன் நபி வெறும் கொண்டாட்டமாக இருக்கக்கூடாது – ஜனாதிபதியின் செய்தி
இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களால் இன்று புதன்கிழமை (26) அனுஷ்டிக்கப்படும் புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமிய நாட்காட்டியின் ‘ரபீஉல் அவ்வல்’ மாதத்தின் பிறப்பைத் தொடர்ந்து அனுஷ்டிக்கப்படும் மீலாதுன் நபி விழா, வெறுமனே ஒரு கொண்டாட்டமாக மட்டுமன்றி, ஆழமான ஆன்மீகத்தையும் மனிதநேயத்தையும் பிரதிபலிக்கும் தினமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இருளிலிருந்து வெளிச்சத்துக்கு மனிதகுலத்தை அழைத்துச் செல்லும் வகையில் பொறுமை, கருணை மற்றும் மனிதநேயத்தின் வழியை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வெளிப்படுத்தியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நபிகளார் 23 ஆண்டுகளாக எதிர்கொண்ட பல்வேறு சவால்களும், அவர் செய்த தியாகங்களும் அமைதி, சகோதரத்துவம், தூய்மை, நம்பகத்தன்மை மற்றும் நீதி நிலவும் சிறந்த சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனம், சாதி, நிறம் அல்லது குலம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை மதிப்பிடுவதை நபிகளார் நிராகரித்ததுடன், மனிதகுலம் அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவை என்பதையும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
உண்மை, சகிப்புத்தன்மை, கருணை உள்ளிட்ட உயர்ந்த நற்பண்புகளே மனிதர்களின் மேன்மையை தீர்மானிக்கும் அடிப்படைகளாக இருக்க வேண்டும் என்பதையும் நபிகளாரின் போதனைகள் எடுத்துக்காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சமூகத்தில் நிலவும் பணக்கார–ஏழை இடைவெளியை குறைத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான வலுவான அடித்தளத்தை நபிகளார் ஏற்படுத்தியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சி நிலவும், அனைவரும் சமமாக நடத்தப்படும் நீதியான சமூகத்தை உருவாக்குவதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் நபிகளாரின் போதனைகளில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மனிதர்களின் உளத் தூய்மையையும் சமூகத்தின் நன்னடத்தையையும் சீர்குலைக்கும் தீமைகளை இஸ்லாம் நிராகரிப்பதாகக் கூறிய ஜனாதிபதி, நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் நபிகளாரின் போதனைகளும் வாழ்க்கை முன்மாதிரியும் வலிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
வெறுப்புக்குப் பதிலாக அன்பையும், பிணக்குக்குப் பதிலாக சகோதரத்துவத்தையும் மதிக்கும் புதிய யுகத்தை நோக்கிய பயணத்தில், நபிகளார் போதித்த தியாகம் மற்றும் மனிதநேயத்தின் ஒளி வழிகாட்டியாக அமையும் என தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் உயர்ந்த முயற்சிகளை தமது வாழ்க்கையிலும் அர்த்தமுள்ளதாகக் கொண்டு செல்லுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி, இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள்ள மீலாதுன் நபி தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.