கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 22 பேர் காயம்
பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 22 பயணிகளும் உடனடியாக மீட்கப்பட்டு ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற குறிப்பிட்ட வளைவுப் பகுதியானது அடிக்கடி விபத்துகள் பதிவாகும் இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.