தெஹிவளையில் தயாரித்து 'Made in China' ஸ்டிக்கர்: பிரபல ஆடை விற்பனை நிலையத்துக்கு விநியோகிக்கப்பட்ட பாதணிகள்!

தெஹிவளையில் தயாரிக்கப்பட்டு 'மேட் இன் சைனா' என போலியாக லேபிளிடப்பட்ட சுமார் 1,000 சோடி பாதணிகளை நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைத்து கைப்பற்றியுள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் நுகர்வோரை ஏமாற்றும் நோக்கில் பிரபல ஆடை விற்பனை நிலையத்திற்கு இவை விநியோகிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தெஹிவளையில் தயாரித்து 'Made in China' ஸ்டிக்கர்: பிரபல ஆடை விற்பனை நிலையத்துக்கு விநியோகிக்கப்பட்ட பாதணிகள்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

தெஹிவளை, கவுடான பகுதியில் இரகசியமாக இயங்கிவந்த பாதணி உற்பத்தி மற்றும் பொருத்தும் நிலையமொன்றை சுற்றிவளைத்த நுகர்வோர் விவகார அதிகார சபை, அங்கிருந்து சுமார் 1,000 சோடி பாதணிகளை கைப்பற்றியுள்ளது. 

பிரபல ஆடை மற்றும் நவீன ஆடை விற்பனை சங்கிலித் தொடர் நிறுவனமொன்றில் கொள்வனவு செய்யப்பட்ட பாதணிகளின் விலைப்பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, செப்டம்பர் 11ஆம் திகதி இந்த அதிரடி சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பாதணிகளுக்கான அடிப்பாகங்கள் மற்றும் ஏனைய மூலப்பொருட்கள் தனித்தனியாக இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் தெஹிவளையில் உள்ள குறித்த இடத்தில் வைத்து ஒன்றுசேர்த்து ஒட்டப்பட்டு பாதணிகளாக தயாரிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

முழுமையாக தயாரிக்கப்பட்ட பாதணிகளுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரிகளை தவிர்ப்பதற்காகவே இந்த உத்தி கையாளப்பட்டிருக்கலாம் என அதிகார சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

உள்நாட்டில் இவ்வாறு தயாரிக்கப்பட்ட பாதணிகள், உண்மையான உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி எதுவுமின்றி 'மேட் இன் சைனா' (Made in China) என்ற லேபிளுடன் பொதி செய்யப்பட்டு, பின்னர் பிரபல விற்பனை நிலைய வலையமைப்பிற்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

சீன எழுத்துக்கள் மற்றும் 'மேட் இன் சைனா' அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதால், இவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என நுகர்வோர் தவறாக நம்ப வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது சுமார் 1,000 சோடி பாதணிகளுடன், அவற்றின் உற்பத்தி மற்றும் அசெம்பிள் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. 

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், விலைப்பட்டியல் மற்றும் விநியோகச் சங்கிலித் தடமறிதல் ஊடாக இவ்வாறான சட்டவிரோத மற்றும் ஏமாற்று வர்த்தக நடவடிக்கைகளைக் கண்டறியும் சோதனைகள் தொடரும் எனவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT