காலணிக்குள் போதைப்பொருள்! வெலிக்கடை சிறைக்குள் கொண்டு செல்ல முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது
காலணிகளுக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர், நேற்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான வாயிலில் சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே, இவர் பிடிபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான அதிகாரி, அதே சிறைச்சாலையில் கடமையாற்றி வரும் கட்டுப்பாட்டாளர் என்பது தெரியவந்துள்ளது. அவர் அணிந்திருந்த காலணிகளுக்குள் இருந்து 96 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 16.7 கிராம் ஹெரோய்ன் ஆகியவற்றை சோதனையில் ஈடுபட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குற்றத் தடுப்புப் பிரிவினர் ஸ்தலத்துக்கு வருகை தந்து சந்தேகநபரையும் போதைப்பொருட்களையும் பொறுப்பேற்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.