ஒரு பில்லியன் டொலர் உண்டியல் மோசடி: 4 வங்கி அதிகாரிகள் கைது – ஓகஸ்ட் 20 வரை விளக்கமறியல்

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட பணத்தில் 6.5 மில்லியன் ரூபாய் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஒரு பில்லியன் டொலர் உண்டியல் மோசடி: 4 வங்கி அதிகாரிகள் கைது – ஓகஸ்ட் 20 வரை விளக்கமறியல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையிலிருந்து சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை உண்டியல் முறை மூலம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வங்கி அதிகாரிகளையும் எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்  நேற்று (17) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வங்கிகளுக்குள்ளேயே வைத்து கைது

நாட்டுக்கு எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல், இறக்குமதி நடவடிக்கைகளுக்காக பணம் செலுத்தப்பட்டதாகக் கூறி, சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைகளின் அடிப்படையில், நான்கு தனியார் வங்கிகளைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்கள் பணியாற்றிய வங்கி வளாகங்களிலேயே வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்வாறான முறையில் வங்கி அதிகாரிகள் பணியாற்றும் இடத்திலேயே கைது செய்யப்படுவது வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜெப்ரி மொஹமட் வழங்கிய வாக்குமூலம்

இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணைகளில் ஜெப்ரி மொஹமட் எனப்படும் சந்தேகநபர் ஒருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தற்போது கைது செய்யப்பட்டுள்ள நான்கு வங்கி அதிகாரிகளும் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர் நாட்டுக்கு பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 36 நிறுவனங்களை நிறுவியுள்ளதாகவும், அந்த நிறுவனங்களின் பெயரில் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக நான்கு தனியார் வங்கிகளையும் அணுகியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இறக்குமதி நடவடிக்கைகளுக்காக பணம் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போதிலும், குறித்த பொருட்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வங்கி அதிகாரிகளுக்கு வாராந்தம் பணம்?

கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரிகள் குறித்த சந்தேகநபரை நேரில் சந்தித்து வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியதாகவும், பெரும்பாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவ்வாறான சந்திப்புகள் இடம்பெற்றதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், குறித்த சந்தேகநபர் நான்கு வங்கி அதிகாரிகளுக்கும் வாராந்தம் பணம் வழங்கி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது.

அதன்படி, சில அதிகாரிகளுக்கு வாரத்திற்கு 30,000 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிறுவனங்களை சரிபார்க்காமல் கணக்குகள் திறப்பு

வங்கி அதிகாரிகள் என்ற வகையில் நிறுவனங்களுக்கான வங்கிக் கணக்குகளைத் திறக்கும் போது, அந்த நிறுவனங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

எனினும், உரிய சரிபார்ப்புகளை மேற்கொள்ளாமல், குறித்த நிறுவனங்களின் கணக்குகளைத் திறப்பதற்கு இந்த அதிகாரிகள் ஒத்துழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட பணத்தில் 6.5 மில்லியன் ரூபாய் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பிணை கோரிக்கை நிராகரிப்பு

சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அவர்களில் சிலர் வங்கி முகாமையாளர்களாகவும், ஏனையோர் இளநிலை நிறைவேற்று மற்றும் இளநிலை அதிகாரிகளாகவும் பணியாற்றி வருவதாக தெரிவித்தனர்.

வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதே இவர்களின் பொறுப்பு என்றும், நிறுவனங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனவா, அவை உண்மையில் பொருட்களை இறக்குமதி செய்கின்றனவா என்பனவற்றை சரிபார்ப்பது மேலதிகாரிகளின் பொறுப்பு என்றும் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

மேலும், பில்லியன் கணக்கான ரூபாய் மோசடியில் இளநிலை அதிகாரிகளை நேரடியாகப் பொறுப்பாக்குவது நியாயமற்றது எனவும், அவர்களை பிணையில் விடுவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், இரு தரப்பினரின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான், சந்தேகநபர்களின் பிணைக் கோரிக்கையை நிராகரித்து, நான்கு வங்கி அதிகாரிகளையும் எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT