சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: ஊழியர்கள் எழுவர் காயம்; மூவரது நிலைமை கவலைக்கிடம்
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (26) அதிகாலை இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் 07 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 04 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிவிபத்தில் சமையலறையில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்புக் காரணமாக வைத்தியசாலைக் கட்டடத்துக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களுக்கோ அல்லது அங்கு கடமையில் இருந்த சுகாதாரப் பணியாளர்களுக்கோ எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை.
சம்பவத்தை அடுத்து துரிதமாகச் செயற்பட்ட சுகாதார ஊழியர்கள், விடுதிகளில் தங்கியிருந்த நோயாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி அவர்களுக்குத் தேவையான உடனடி மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளனர்.
மேலும், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காகப் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.