பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு: ஹெரோய்ன், பணத்துடன் மூவர் கைது
கிரிவுல்ல பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி அதிவேகமாகத் தப்பிச் சென்ற சொகுசு கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விரட்டிச் சென்ற பொலிஸார், பன்னல நகரில் வைத்து வாகனத்தை வழிமறித்து மூவரைக் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் சாரதி மற்றும் காரில் பயணித்த இரு பெண்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து ஹெரோய்ன் மற்றும் பெருந்தொகையான பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் பயணிப்பதாக கிரிவுல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, அப்பகுதியில் வைத்து குறித்த சொகுசு காரைச் சோதனையிடுவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர். எனினும், பொலிஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாமல் சாரதி வாகனத்தை நிறுத்தாது அதிவேகமாகச் செலுத்தித் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றதுடன், வாகனத்தை நிறுத்துமாறு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்தனர்.
சாரதி தொடர்ந்து வாகனத்தைச் செலுத்தியதால், காரின் டயர்களை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியிலும் நிறுத்தப்படாமல் சென்ற கார், இறுதியாக பன்னல நகரில் பொலிஸ் ஜீப் வண்டி மற்றும் ஏனைய சில வாகனங்களைக் குறுக்கே நிறுத்தி முற்றுகையிடப்பட்டது.
இதன்போது காரின் கதவுகளைத் திறக்க சாரதி மறுத்ததால், பொலிஸ் உத்தியோகத்தர்கள் டி-56 ரக துப்பாக்கிகளைக் காட்டி எச்சரித்தனர். பின்னர் காரின் இடதுபுறக் கண்ணாடியை துப்பாக்கியால் அடித்து உடைத்தே சாரதியையும் பின் இருக்கையில் இருந்த இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 15 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 9 இலட்சத்து 24 ஆயிரத்து 770 ரூபாய் பணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிரிவுல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிரிவுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.