காலி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரிப்பு
காலி - பத்தேகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
முன்னதாக, இரண்டு பெண்கள் உட்பட மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், சம்பவ இடத்திலேயே ஆடவர் ஒருவர் உயிரிழந்திருந்தார். தற்போது பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த மற்றைய பெண் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறு உயிரிழந்த பெண் அம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மூவரும் பத்தேகமவில் அமைந்துள்ள காலி குற்றத்தடுப்புப் பிரிவில் கையொப்பமிட்டுவிட்டு முச்சக்கர வண்டியில் மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியை வீதியில் வழிமறித்த துப்பாக்கிதாரிகள், டி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.