ஃபேஸ்புக் வருமானத்துக்காக சிறுவர்களின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றுபவர்களுக்கு எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யும் போது, பெற்றோர்களும் பாதுகாவலர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான பதிவுகள் சிறுவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோரின் அனுமதியுடனும் அல்லது அனுமதியின்றியும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் இணையத்தில் பதிவேற்றப்படுவது சடுதியாக அதிகரித்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிநபர்களும் பல்வேறு நிறுவனங்களும் சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்துதல் அல்லது அவர்களது அன்றாட செயற்பாடுகளைக் காட்சிப்படுத்துதல் என்ற போர்வையில், சிறுவர்களின் வீடியோக்களை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, ஒரு சிறுவரின் அன்றாட வழமை மற்றும் வாழ்க்கை முறை குறித்த விடயங்களை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோக்கள் மற்றும் Vlogs பதிவிடப்படுவதால், சிறுவர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளிநபர்களுக்குக் கசிந்து அவர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அண்மைக்கால செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி தொடர்பிலும் அமைச்சு தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது. இணையத்தில் பகிரப்படும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தவறாகப் பயன்படுத்தி, ஆபாசமான அல்லது பாலியல் ரீதியாக சிதைக்கப்பட்ட போலியான உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, சிறுவர்களின் நல்வாழ்வு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பான பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும், சிறுவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளடக்கங்களை சமூக ஊடகங்களில் பதிவிடும் போதும் அல்லது பகிர்வதற்கு அனுமதிக்கும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.