சுங்கத் தீர்வை செலுத்தாது சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டுப் பொருத்தப்பட்ட ஜீப் வண்டி பண்டாரவளையில் மீட்பு; சந்தேகநபர் கைது
உரிய சுங்கத் தீர்வைகளைச் செலுத்தாமல் சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு, பின்னர் உள்நாட்டில் பொருத்தப்பட்டதாகக் கூறப்படும் ஜீப் ரக வாகனமொன்று பண்டாரவளைப் பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே, கடந்த நவம்பர் 19 ஆம் திகதி குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசாரணைகளின் போது குறித்த வாகனம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அதனடிப்படையில், கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று பண்டாரவளைப் பிரதேசத்திற்குச் சென்று குறித்த ஜீப் வண்டியைத் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.