ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி பஸ் சேவை ஆரம்பம்! பஸ்களின் நேரங்கள் இதோ
ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணிக்கும் வகையிலான புதிய இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சேவை, ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்னவினால் இந்த புதிய பஸ் சேவை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஹட்டன் இ.போ.ச. டிப்போவும் காரைநகர் இ.போ.ச. டிப்போவும் இணைந்து இந்தப் புதிய போக்குவரத்து சேவையை முன்னெடுக்கின்றன.
இதன்படி, தினமும் பிற்பகல் 03 மணிக்கு ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பஸ் சேவையும், யாழ்ப்பாணத்திலிருந்து ஹட்டன் நோக்கி பிற்பகல் 4.45 மணிக்கு மற்றுமொரு பஸ் சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தப் பஸ் சேவைக்கான ஆசனங்களை பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் இ.போ.ச. டிப்போ முகாமையாளர் பாலித வீரசூரிய தெரிவித்தார். ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பஸ் பயணத்தில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிப்பதற்காக பெருமளவான பயணிகள் பஸ் நிலையத்தில் திரண்டிருந்தனர்.
குறிப்பாக தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் மலையகத்தின் ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான நேரடி இ.போ.ச. பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளமை தமக்கு பெரும் நன்மையளிப்பதாக பிரதேச மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, புதிய பஸ் சேவையை ஆரம்பித்து வைப்பதற்கு முன்னதாக ஹட்டன் இ.போ.ச. டிப்போ முகாமையாளர் உள்ளிட்ட ஊழியர்கள், பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் இணைந்து டிக்கோயா வனராஜா தோட்டத்தில் அமைந்துள்ள கணபதி ஆலயத்தில் விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.