நுவரெலியா சுற்றுலா விடுதியில் 27 வயது இளம்பெண் சடலமாக மீட்பு: காதலனைத் தேடும் பொலிஸார்!
நுவரெலியா, மாகாஸ்தொட்ட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் 27 வயதுடைய இளம்பெண் ஒருவர் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணம் கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸாரின் ஆரம்பகட்டத் தகவல்களின்படி, உயிரிழந்த பெண் கடந்த நவம்பர் 7ஆம் திகதி தனது காதலனுடன் நுவரெலியா மாகாஸ்தொட்ட பகுதியிலுள்ள சுற்றுலா விடுதிக்கு வருகை தந்துள்ளார்.
அவரது காதலன் நுவரெலியா, தேரிப்பஹ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருவரும் விடுதிக்கான கட்டணத்தைச் செலுத்தி அறையொன்றை முன்பதிவு செய்து அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் 10ஆம் திகதி காலை குறித்த பெண் விடுதிக்குள் காயங்களுடன் கிடப்பதை விடுதியின் உரிமையாளர் அவதானித்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக நுவரெலியா பொலிஸாருக்குச் சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளார்.
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், குறித்த பெண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
பெண்ணின் உடலில் காயங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவை எவ்வாறு ஏற்பட்டன என்பது தொடர்பான முழுமையான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணின் காதலன் விடுதியிலிருந்து வெளியேறியுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது தற்போதைய இருப்பிடத்தைக் கண்டறிந்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பில் நுவரெலியா நீதவானின் சம்பவ இடப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்டப் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.