தலவாக்கலை, லிந்துலை பகுதிகளில் தொடரும் கடை உடைப்புகள்: பொதுமக்கள் மத்தியில் அச்சம்!
நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் அண்மைக்காலமாக கடை உடைப்புகள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருவதால், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது.
மன்ராசி, டயகம, தலவாக்கலை மற்றும் நாகசேனை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த வாரம் மன்ராசி நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றும், டயகம நகரிலுள்ள மற்றுமொரு கடையும் உடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கடைகளிலிருந்து பணம் மற்றும் பெருமளவிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருடப்பட்ட பணத்தின் மொத்தத் தொகை மற்றும் பொருட்களின் பெறுமதி தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை. இதேவேளை, தலவாக்கலை நகரில் அமைந்துள்ள கடையொன்றும் உடைக்கப்பட்டு, அங்கிருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரிலும் மற்றுமொரு கடை உடைப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை (09.11.2026) இரவு குறித்த கடையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
அண்மைய நாட்களில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை வர்த்தகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கும் அவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பொலிஸார் கோரியுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் அவற்றை பொலிஸாருக்குத் தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.