கையிருப்பில் இருந்த எரிவாயுவை விற்பனை செய்ய மறுத்த வர்த்தகருக்கு அபராதம் – 28 சிலிண்டர்கள் அரசுடைமையாக்கம்
கையிருப்பில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இருந்தபோதும் அவற்றை நுகர்வோருக்கு விற்பனை செய்ய மறுத்த கண்டி வர்த்தகர் ஒருவருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதுடன், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 28 எரிவாயு சிலிண்டர்களை அரசுடைமையாக்க உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கண்டி, கோடுகோடெல்லா வீதியில் அமைந்துள்ள லிட்ரோ எரிவாயுவின் அங்கிகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் நிலையமான டி.டி. குருசிங்க டிரேடிங் என்ற வர்த்தக நிலையத்திலேயே இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த வர்த்தக நிலையம் நுகர்வோருக்கு எரிவாயுவை விற்பனை செய்ய மறுப்பதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி இந்தத் திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
சோதனையின் போது நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரி ஒருவர் வாடிக்கையாளரைப் போன்று சென்று 12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரைக் கோரியுள்ளார். எனினும், எரிவாயு கையிருப்பில் இல்லை என வர்த்தகர் கூறியுள்ளார். தொடர்ந்து அதிகாரிகள் அந்த வர்த்தக நிலையத்தை தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது, அங்கு 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து குறித்த வர்த்தகருக்கு எதிராக கண்டி நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வர்த்தகருக்கு அபராதம் விதித்ததுடன், கைப்பற்றப்பட்ட 28 எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்க உத்தரவிட்டது.
2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் பிரிவு 16(ஏ) இன்படி, விற்பனைக்காகப் பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொண்டு பொருட்கள் இல்லை என்று பொய்யான தகவல்களைக் கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது சட்டவிரோதமாகும்.
பொருட்களைப் பதுக்குதல், வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்துதல் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக விசேட சுற்றிவளைப்புகளும் சோதனைகளும் முன்னெடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்கள் அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடுகளைப் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.