மாத்தளை பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் திடீர் சுகயீனத்தால் உயிரிழப்பு
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மாத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 36 வயதுடைய நபரொருவர், இன்று (20) அதிகாலை திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் தடுப்புக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர் திடீரென சுகயீனமுற்றதைத் தொடர்ந்து, உடனடியாக மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், அதிகாலை 12.45 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர் கண்டி - அம்பிட்டிய, திலேனகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாத்தளை பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (19) காலை மாத்தளை ஹித்கொல்ல பிரதேசத்தில் வைத்து 3,010 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டதன் பின்னர் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு 11.00 மணியளவில் அவருக்குத் திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த சந்தேகநபர் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் என நம்பப்படுவதுடன், கண்டி மற்றும் கிராண்ட்பாஸ் உள்ளிட்ட சுமார் 10 பொலிஸ் நிலையங்களில் அவருக்கு எதிராகப் போதைப்பொருள் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீதான பிரேதப் பரிசோதனை இன்று நடத்தப்படவுள்ளதுடன், இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.