"மகன் திருடும் போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; திருட விட்டுவிட்டு கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் எந்தப் பயனும் இல்லை" - ஜனாதிபதி அநுர
"பொதுமக்களின் வரிப்பணத்தைத் திருடிய எவருக்கும் மன்னிப்பு கிடையாது என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாகப் பாயும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பை தமது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
நாட்டின் அபிவிருத்தி மற்றும் விவசாயக் கொள்கைகள் தொடர்பாக எவருடனும் கலந்துரையாடத் தயார் எனச் சுட்டிக்காட்டிய அவர், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் விடயத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என எச்சரித்தார்.
ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்கள் முற்றாக ஒழிக்கப்படும் எனவும், ஏற்கனவே சர்வதேச ஒத்துழைப்புடன் 70-க்கும் மேற்பட்ட பாதாள உலகக் குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட எவருக்கும் மனிதாபிமான அடிப்படையிலோ அல்லது அரசியல் செல்வாக்கின் அடிப்படையிலோ கருணை காட்டப்பட மாட்டாது என ஜனாதிபதி வலியுறுத்தினார். இவ்வாறான பாரதூரமான குற்றங்களைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எவர் மீதும் தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கம் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, சட்டத்திற்கு முரணாக யாரையும் அவசரமாகச் சிறையில் அடைக்காமல், உரிய விசாரணைகளின் ஊடாக நீதிமன்றத்தில் ஆதாரங்களை நிரூபித்தே சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.
தவறிழைத்தவர்கள் கைது செய்யப்படும் போது கண்ணீர் விட்டு அனுதாபத்தைத் தேட முடியாது எனக் குறிப்பிட்ட அவர், "மகன் திருடும் போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; திருட விட்டுவிட்டு கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் எந்தப் பயனும் இல்லை" எனத் தெரிவித்தார். சட்டம் தாய், தந்தை, சகோதரர் என அனைவருக்கும் சமமானது என்றும், பொதுமக்களின் பணத்தில் ஒரு சதத்தையேனும் மோசடி செய்த எவரும் தப்ப முடியாது என்ற படிப்பினை நாட்டில் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய ஊழலை ஒழித்து, சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி நாட்டைப் புதிய திசையில் கட்டியெழுப்பும் பணிகளை அரசாங்கம் தொடரும் என ஜனாதிபதி தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டினார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.