செவிப்புலன் வலுவிழந்தோருக்காக 119 அவசர சேவையில் புதிய வசதி
செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் ஊடாக வீடியோ அழைப்பின் மூலம் முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் புதிய சேவையை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த புதிய திட்டம் செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் இந்த விசேட திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நிரந்தர குறுஞ்செய்தி இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் வரை, தற்காலிகமாக 011-2809980 என்ற தொலைபேசி இலக்கம் பயன்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு பயன்படுத்துவது?
முதலில் 011-2809980 என்ற இலக்கத்தை கைபேசியில் சேமித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், வாட்ஸ்அப் மூலம் அந்த இலக்கத்திற்கு குரல் அழைப்பை மேற்கொள்ள வேண்டும்.
அழைப்பு தானாக துண்டிக்கப்பட்ட பின்னர், பயனாளரின் கைபேசிக்கு ஒரு சிறப்பு Link குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
அந்த இணைப்பைத் திறந்து “Join Browser” மற்றும் பின்னர் “Join Meeting” ஆகிய தெரிவுகளைத் தேர்வு செய்வதன் மூலம் வீடியோ அழைப்பில் இணைந்து கொள்ள முடியும்.
இதன்மூலம் செவிப்புலன் வலுவிழந்தவர்கள் தங்களது முறைப்பாடுகளை வீடியோ வழியாக பொலிஸாரிடம் எளிதாகத் தெரிவிக்க முடியும்.
செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்திற்கொண்டு இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.