போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் அவரது மனைவியின் ரூ. 4.45 கோடி பெறுமதியான சொத்துகள் முடக்கம்
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்ட 44.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணி மற்றும் இரண்டு மாடி வீடு உள்ளிட்ட சொத்துகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து, சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, குறித்த சொத்துகள் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 14 வேலை நாட்களுக்கு எவ்வித கொடுக்கல் - வாங்கல்களையும் மேற்கொள்ள முடியாதவாறு அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
'அடா' என அழைக்கப்படும் ரணசிங்க ஆரச்சிகே சமன் குமார மற்றும் அவரது மனைவியான சங்கீதா பிரியதர்ஷனி ஆகியோருக்கு எதிராக, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான விசாரணைகளின் போதே, இந்தத் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
சங்கீதா பிரியதர்ஷனி என்பவரின் பெயரில் பஹல கடுனேரிய பகுதியில் அமைந்துள்ள 24.80 பேர்ச்சஸ் காணி 9.5 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டு, பின்னர் அதில் சுமார் 35 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு மாடி வீடொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 2011ஆம் ஆண்டின் 40ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 2026ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 2006ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் 7(1) பிரிவுக்கு அமைய, குறித்த சொத்துக்கள் தொடர்பில் மேலதிக பரிவர்த்தனைகள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில், இந்த இடைக்கால முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.