வெனிசுவெலாவில் அவசர நிலை; தொடர் தாக்குதலை நடத்தி ஜனாதிபதியை பிடித்த அமெரிக்க இராணுவம்

வெனிசுவெலாவின் தலைநகர் கரகஸில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

ஜனவரி 3, 2026 - 18:35
வெனிசுவெலாவில் அவசர நிலை; தொடர் தாக்குதலை நடத்தி ஜனாதிபதியை பிடித்த அமெரிக்க இராணுவம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவின்பேரில், வெனிசுவெலாவை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களுக்குப் பின்னர், வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை அவர் தனது ‘Truth Social’ சமூக வலைதளக் கணக்கில் வெளியிட்ட பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். பெரியளவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மதுரோ தம்பதியர் பிடிபட்டதாகவும், அவர்களை நாட்டைவிட்டு வெளியே அனுப்பியதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, வெனிசுவெலாவின் தலைநகர் கரகஸில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

நேற்று அதிகாலை சுமார் 2 மணி முதல் 2.15 மணி வரை கரகஸில் குறைந்தது ஏழு தடவைகள் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, தாழப்பறக்கும் விமானம் அந்தப் பகுதியைச் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், வெனிசுவெலா ஜனாதிபதி மதுரோ அவசரநிலையை அறிவித்து, அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டை கடுமையாகக் கண்டித்தார். எனினும், பல வாரங்களாக அமெரிக்க இராணுவ அழுத்தம் நீடித்து வரும் நிலையில், வாஷிங்டனுடன் ஒத்துழைக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, கரீபியன் பகுதியில் அமெரிக்க கடற்படை பணிக்குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும், வெனிசுவெலாவுக்கு எதிராக தரைவழி தாக்குதலுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இடங்களை அமெரிக்கா தாக்கியதாக டிரம்ப் முன்பே கூறியிருந்தாலும், அந்த நடவடிக்கைகள் குறித்த விரிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

வெனிசுவெலா நிர்வாகம், போதைப்பொருள் குற்றங்களை ஊக்குவிப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், மதுரோவின் அரசை ஒரு பயங்கரவாத அமைப்பாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதனை மதுரோ நிர்வாகம் மறுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களை கொண்டுள்ள வெனிசுவெலாவை இலக்காகக் கொண்டு தம்மை பதவியிலிருந்து வெளியேற்ற முயற்சி நடப்பதாக மதுரோ குற்றம் சாட்டியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!