ஈரான் மீது மற்றுமொரு இராணுவ நடவடிக்கை தவிர்க்க முடியாதது: பெஞ்சமின் நெதன்யாகு
ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கி சுமார் எட்டு மாதங்களுக்கும் மேலாக அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்கள் மூலம் தான் இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கு இஸ்ரேல் தற்காலிகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முயற்சித்து வருவதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்நிலையில், ஈரானுக்கு எதிரான மற்றுமொரு இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க முடியாது என மூத்த அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கட்டளைப் பிரிவு அதிகாரிகள் குறித்த தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதனை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்துத் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க செனட் சபையில் கடந்த வியாழக்கிழமை ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது 51 க்கு 48 என்ற வாக்கு வித்தியாசத்தில் செனட் உறுப்பினர்கள், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயம் என்ற மசோதாவை நிராகரித்துள்ளனர். மேலும், ட்ரம்பின் ஒப்புதலைப் பெற்று ஈரான் மீதான போரை ஆரம்பிப்பதற்கும் செனட் உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சூழலில், ஈரான் விவகாரத்தில் தாம் எவ்வித முடிவையும் அவசரமாக எடுக்க விரும்பவில்லை எனவும், அடுத்த ஆண்டில் என்ன நடக்கப் போகிறது என்பதை அமெரிக்கா அவதானிக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், அடுத்த ஆண்டில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.