அமெரிக்காவில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய தனியார் விமானம்! 9 பேர் உயிரிழப்பு – வானில் நடந்தது என்ன?
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறிய தனியார் ஜெட் விமானமொன்று குடியிருப்புப் பகுதிக்கு அருகில் விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் பயணித்த ஒன்பது பேரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு புளோரிடாவின் பாம் பீச் கவுண்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.50 மணியளவில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
Learjet 60 ரகத்தைச் சேர்ந்த தனியார் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் பரபரப்பான வீதியொன்றுக்கு அருகில் விழுந்து நொறுங்கியதும் பாரிய தீப்பிழம்பாக வெடித்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற பகுதியில் நிலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டதுடன், சுற்றியுள்ள பகுதிகளில் விமானத்தின் சிதைவுகள் சிதறிக்கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அமெரிக்கப் போக்குவரத்துச் செயலாளர் ஷோன் டஃபி தனது X சமூக ஊடகப் பக்கத்தில் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
பாம் பீச் கவுண்டியில் இடம்பெற்ற விமான விபத்து மிகவும் துயரமான சம்பவம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஆஸ்டின்-பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், பஹாமாஸ் தீவுகளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்ததாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும், விமானம் விபத்துக்குள்ளானதற்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அத்துடன், விமானத்தில் பயணித்தவர்களின் அடையாளங்கள் தொடர்பான விவரங்களையும் அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.
இந்த விபத்து தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த புளோரிடா மாநில ஆளுநர் ரொன் டிசான்டிஸ், விமானம் தரையில் மோதிய இடத்தில் பாரிய பள்ளம் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விமானம் ஏவுகணையைப் போன்று அதிவேகமாகக் கீழே விழுந்ததாகவும், அதன் தாக்கம் மிகவும் மோசமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற பகுதியில் தரையில் இருந்த பொதுமக்கள் எவரும் உயிரிழந்ததாகவோ காயமடைந்ததாகவோ உடனடியாகத் தகவல்கள் வெளியாகவில்லை.
விமான விபத்து இடம்பெற்ற நேரத்தில் அந்தப் பகுதியில் மோசமான வானிலை நிலவியதாகவும், இடியுடன் கூடிய மழை பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குப் பின்னர் அதிகாரிகள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நேரத்திலும் அப்பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் அதன் விமானிகள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் மேற்கொண்ட தொடர்புகள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.
விமானம் சுமார் 35,000 அடி உயரத்தில், அதாவது 11 கிலோமீற்றர் உயரத்தில் கிழக்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது, கடுமையான காற்றுக் கொந்தளிப்பு, பனிப்படிவு மற்றும் மழைப்பொழிவு தொடர்பான பிரச்சினைகளை விமானிகள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, விமானத்தை மேலும் 2,000 அடி உயரத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அனுமதி கோரியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிறிது நேரத்திலேயே விமானம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து மிக வேகமாகக் கீழ்நோக்கி இறங்கத் தொடங்கியுள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பதிவுகள் மற்றும் விமானத்தின் பயணத் தரவுகளின்படி, ஆரம்பத்தில் நிமிடத்திற்கு 10,000 அடி வேகத்தில் விமானம் கீழிறங்கியுள்ளது.
பின்னர் அந்த வேகம் நிமிடத்திற்கு 20,000 அடியாகவும், இறுதியில் 30,000 அடியாகவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் விமானத்தின் வேகம் அதன் வடிவமைப்புக்கான பாதுகாப்பு வரம்புகளை மீறியதாக ஆரம்பகட்டத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து விமானியொருவர் அவசரநிலையை அறிவித்து உதவி கோரியுள்ளார்.
இதன்போது விமானம் வலதுபுறமாகக் கடுமையாகச் சாய்ந்த பின்னர் தரையை நோக்கி அதிவேகமாக விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.