கலிபோர்னியாவின் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட உலங்குவானூர்தி விபத்து: இரண்டு விமானிகள் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா யோசெமிட்டி தேசிய பூங்காவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம் குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கலிபோர்னியாவின் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட உலங்குவானூர்தி விபத்து: இரண்டு விமானிகள் பலி
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யோசெமிட்டி தேசிய பூங்காவில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர். 

பூங்காவில் பரவி வரும் டோம் காட்டுத்தீயை அணைப்பதற்காக வான்வழியாக நீர் விசிறும் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக வனவிலங்கு மற்றும் அவசரகால முகாமைத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேரிபோசா கவுண்டி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒஸ்ட்ராண்டர் ஏரிக்கு தென்கிழக்கே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தீயணைப்புப் பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பிரசிஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான சுப்பர் பூமா ரக உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்து இடம்பெற்ற போது உலங்குவானூர்தியில் குறித்த இரு விமானிகள் மாத்திரமே பயணித்துள்ளதாகவும், இதில் உயிரிழந்த ஒருவரின் பெயர் கிரெக் கிங் எனவும் ஏனைய விபரங்கள் உடனடியாக பகிரங்கப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள பிரசிஷன் நிறுவனம், தங்களது முக்கிய ஊழியர்கள் இருவரை இழந்திருப்பது தாங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான சரியான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அமெரிக்காவின் பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை ஆகியவை இணைந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

கடந்த செப்டம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமான குறித்த டோம் காட்டுத்தீயானது சுமார் 3,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் தீவிரமாக பரவி வருகின்றது. நிலப்பரப்பு வழியாக தீயணைப்பு படையினர் செல்ல முடியாத உயரமான மற்றும் கரடுமுரடான மலைப்பகுதிகளில் தீ பரவுவதைத் தடுப்பதற்காகவே உலங்குவானூர்திகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த விபத்தைத் தொடர்ந்து உயிரிழந்த விமானிகளின் சடலங்கள் மீட்கப்பட்டு மேரிபோசா நகர் ஊடாக கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT