வழுக்கைத் தலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சீனாவின் புதிய சீப்பு? ஆய்வில் நம்பிக்கையூட்டும் முடிவுகள்!

வழுக்கைத் தலைக்குத் தீர்வாக, முடி வளர்ச்சியைத் தூண்டும் விசேட மின்னணுச் சீப்பு ஒன்றைச் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஆய்வக எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில், வெறும் 28 நாட்களில் சுமார் 98 சதவீத முடி வளர்ச்சியை இச்சாதனம் ஏற்படுத்தியுள்ளது.

வழுக்கைத் தலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சீனாவின் புதிய சீப்பு? ஆய்வில் நம்பிக்கையூட்டும் முடிவுகள்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

வழுக்கைத் தலைக்குத் தீர்வாக, முடி வளர்ச்சியைத் தூண்டும் விசேட மின்னணுச் சீப்பு ஒன்றைச் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 

ஆய்வக எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில், வெறும் 28 நாட்களில் சுமார் 98 சதவீத முடி வளர்ச்சியை இச்சாதனம் ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

'டிடெங்கிள்' (Detangle) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சோதனை சாதனம், பெய்ஜிங்கிலுள்ள பெய்ஹாங் பல்கலைக்கழக (Beihang University) ஆராய்ச்சியாளர்களால், ஹொங்கொங் நகர பல்கலைக்கழக (City University of Hong Kong) விஞ்ஞானிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. 
இம்மாதம் 3ஆம் திகதி 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' (Nature Communications) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இந்தச் சாதனம் மென்மையான மின் தூண்டுதல்களுடன், சிகிச்சைக்கான மூலக்கூறுகளை நேரடியாக தலைமுடி வேர்களுக்குள் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமான வழுக்கைக்கான சிகிச்சைகள் பெரும்பாலும் மேலோட்டமான மருந்துகளையே நம்பியிருக்கும் நிலையில், இந்த மின்னணுச் சீப்பு தலைமுடியை வாரும்போது சிறிய மின்முனைகளைக் கொண்ட விசேட பற்களின் மூலம் மின் துடிப்புகளை உருவாக்குகிறது. இந்த மின் தூண்டுதல் சிகிச்சைக்கான மூலக்கூறுகள் சருமத்தின் ஆழத்துக்குச் சென்று, தலைமுடி வேர்களை மிகவும் திறம்படச் சென்றடைய உதவுகிறது.

ஆண்ட்ரோஜெனடிக் அலோபீசியா (Androgenetic alopecia) எனப்படும் பரவலான முடி உதிர்வால் பாதிக்கப்பட்ட எலிகள் மீது விஞ்ஞானிகள் இந்தச் சாதனத்தைச் சோதித்தனர். 28 நாட்களுக்குப் பிறகு, இந்த மின் தூண்டுதல் மற்றும் மூலக்கூறு சிகிச்சையைப் பெற்ற எலிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதியில் சுமார் 97.85 சதவீத முடி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனுடன் ஒப்பிடுகையில், உலகளவில் முடி உதிர்வுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் 'மினொக்சிடில்' (Minoxidil) மருந்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட எலிகளுக்கு, அதே காலப்பகுதியில் சுமார் 70 சதவீத முடி வளர்ச்சியே ஏற்பட்டுள்ளது. விலங்குகளில் மாத்திரமே இதுவரை இது நிரூபிக்கப்பட்டிருந்தாலும், வழக்கமான மேற்பூச்சு சிகிச்சைகளை விட முடி வளர்ச்சியைத் தூண்டுவதில் புதிய தொழில்நுட்பம் அதிக செயல்திறனைக் கொண்டிருக்கலாம் என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன.

தினசரி தலைவாரும் வழக்கமான பழக்கத்தின் மூலமாகவே இந்தச் சிகிச்சையை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் இந்தச் சீப்பை ஆராய்ச்சி குழுவினர் வடிவமைத்துள்ளனர். 

இருப்பினும், இந்தச் சாதனம் இன்னும் ஆரம்பகட்ட சோதனை நிலையிலேயே உள்ளதாகவும், மனிதர்களில் முடி வளர்ச்சியை மீட்டெடுப்பது இன்னும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனைப் பரவலான மருத்துவப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு முன்னர், இதன் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நீண்டகால முடிவுகளை உறுதிப்படுத்த மேலதிக ஆய்வுகளும் மனித மருத்துவப் பரிசோதனைகளும் தேவைப்படுகின்றன.

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஆண்ட்ரோஜெனடிக் அலோபீசியா நோய்க்கான சிகிச்சை ஆராய்ச்சியில், இந்தத் தயாரிப்பு ஒரு நம்பிக்கையூட்டும் மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT