அமெரிக்காவின் ‘டேர்ட்டி பாம்’ தாக்குதல் குற்றச்சாட்டை ஈரான் நிராகரிப்பு; போரிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி எனச் சாடல்
அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக முன்வைக்கப்படும் அண்மைய குற்றச்சாட்டுகளை ஈரான் கடுமையாக நிராகரித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஆரம்பித்த அழிவுகரமான போரிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இவ்வாறான கட்டுக்கதைகள் பரப்பப்படுவதாகத் தெஹ்ரான் குற்றம் சாட்டியுள்ளது.
அணு ஆயுதப் பொய்யைத் தொடர்ந்து, தற்போது அமெரிக்கர்கள் 'டேர்ட்டி பாம்' (Dirty Bomb) எனப்படும் கதிர்வீச்சு வெடிகுண்டுக் குற்றச்சாட்டைக் கையில் எடுத்துள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகாய் தஸ்னிம் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராகச் சட்டவிரோதமான மற்றும் அநீதியான போரைத் தொடங்கியமைக்காகப் பொதுமக்களின் கருத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பிக்கும் முயற்சியே இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வொஷிங்டன் டி.சி மீது ஈரான் கதிர்வீச்சு வெடிகுண்டை வெடிக்கச் செய்யவோ அல்லது இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தவோ திட்டமிட்டிருக்கலாம் என அமெரிக்க ஊடகமான சி.என்.என் (CNN) கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் என்ற வாதத்தை நிலைநிறுத்தத் தவறிய பின்னர், தற்போது கதிர்வீச்சு வெடிகுண்டு மற்றும் ஈரானின் அணைக்கட்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எழுப்பி தமது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த அமெரிக்கா முனைவதாகவும், ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளால் அவர்களின் குற்றங்களையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் நியாயப்படுத்த முடியாது எனவும் பகாய் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.